அம்மாவைப் பார்த்தீங்களா அங்கிள்..

கருவை வயிற்றில் சுமந்து தன்னுடைய மூச்சின் மூலம் அதற்கும் சுவாசம் கொடுத்து ,தன்னுடைய உணவுக்குழாயை அதன் வயிற்றுக்குள் நுழைத்து, தான் உண்டு அதன் பசி நீக்கி, தவமாய் தவமிருந்து இன்னொரு ஜென்மம் போல குழந்தையை பெற்றெடுக்கும் தாய்க்குத் தெரியும் பிரசவ வலி.
அப்படி பெற்றெடுத்த குழந்தை பிரசவத்தில் இறந்து பிறந்தால் கூட சில நாள் வேதனைகளோடு அந்தச்சோகத்தை ஆற்றிவிடலாம். கடவுள் தந்த குழந்தையை கடவுளே பறித்துவிட்டான் என்று ஆறுதல் சொல்லிவிடலாம்.ஆனால் பெற்ற குழந்தை காணாமல் போய்விட்டால்..
அந்தக் குழந்தை இந்த நொடி என்ன செய்யுதோ..? அடுத்த நொடி என்ன செய்யுமோ..? பசித்தால் என்ன செய்யும்..? யாருடைய அரவணைப்பில் இப்பொழுது இருக்கும்..? அழுதால் யார் அரவணைப்பது? அதனுடைய சிரிப்பை ரசிப்பவர்களின் கையில் சிக்கியிருக்குமா ?இல்லை அதனைக் காயப்படுத்துபவர்களின் கையில் சிக்கியிருக்குமா..? என்று ஒவ்வொரு நொடியும் செத்துக்கொண்டிருக்கிறாள் எங்கோ ஒரு தாய்..?

இதோ இந்த பூஜா என்ற 4 வயது குழந்தையை ஒரு பிச்சைக்காரன் கடத்தி வந்து தன்னுடன் பிச்சை எடுப்பதற்காக வைத்திருக்கின்றான். பொதுவாக குழந்தைகளை கையில் வைத்து பிச்சை எடுப்பவர்களுக்கு மற்றவர்களை விடவும் அதிகமாக காசு கிடைக்கும். இந்த இரக்கச்சுபாவத்தை தனக்கு சாதகமாக்கிக்கொண்டான் அந்தப் பிச்சைக்காரன்.
திருநெல்வேலி பேருந்துநிலையம் அருகில் கூட நான் இதுபோன்ற காட்சியை காண்பதுண்டு. பச்சிளங்குழந்தைகள் பள்ளிக்குச் செல்லுகின்ற வயதில் சாலையில் பிச்சையெடுக்கும் கொடுமைகளை காண சகிக்காது. கைகளில் தூக்கி கொஞ்ச வேண்டிய வயதில் கால்களைக் கட்டிக்கொண்டு "அண்ணே! அண்ணே" என்று அவர்கள் கெஞ்சுவதை பார்க்கும்பொழுது என்னையறியாமல் விழுந்துவிடுகின்றது காசும் கண்ணீரும்.
பூஜாவைக் கடத்திய அந்தப்பிச்சைக்காரன் கேரள போலிஸ்காரர்களின் கைகளில் தற்பொழுது வசமாக சிக்கியுள்ளான். பூஜா தற்பொழுது (Nirmala Sisu Bhavan in Trivandrum, Kerala, India) திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசு பவன் என்ற ஒரு அநாதைக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளாள்.
போலிஸார்கள் அந்தப்பிச்சைக்காரனின் மூலம் அந்தக்குழந்தையின் இருப்பிடத்தைக் கண்டறிந்துவிடலாம் என்று விசாரித்திருக்கின்றார்கள்.
ஆனால் அந்தக்குழந்தையின் துரதிஷ்டம் அந்தப்பிச்சைக்காரனுக்கு காதும் கேட்காதாம். வாய் பேசவும் முடியாதாம். ஆகவே அவனிடமிருந்து உண்மையை கண்டறிவது சிரமமாகிவிட்டது.
அது மழலை மொழியில் கூறியுள்ள விபரத்தின் படி அந்தக் குழந்தையின்
தாய்மொழி : இந்தி
தந்தை பெயர் : ராஜூ
தாயார் : முன்னி தேவி
அதற்கு ஒரு தம்பியும் அக்காவும் இருப்பதாகவும் கூறியுள்ளாள்.
பிறந்த இடம் : நாகலுப்பி (Nagaluppe) என்றும் கூறியிருக்கின்றாள். ஆனால் விசாரித்துப் பார்த்ததில் அப்படி ஒரு பெயரில் ஒரு ஊர் இல்லது இடம் இருப்பதாக யாருமே கேள்விப்படவில்லை. ஒருவேளை ஊர்ப்பெயரை உச்சரிக்கத்தெரியாமல் அதற்கு தெரிந்த மழலை மொழியில் கூறியிருக்கலாம்.

யாருக்கேனும் இந்தக்குழந்தையைப்பற்றிய தகவல்கள் தெரிந்தாலோ அல்லது அந்தக்குழந்தை கூறிய இடத்தைப் பற்றிய ஏதாவது தகவல்கள் கிடைத்தாலோ அல்லது குழந்தையைக் காணாமல் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றோர்களை காண நேர்ந்தாலோ திருவனந்தபுரத்தில் உள்ள நிர்மலா சிசுபவன் அனாதை இல்லத்திற்கு தகவல் தெரிவிக்கவும்
நிர்மலா சிசுபவன் அநாதை இல்லம் : 0471-2307434 (0471 is the area code for Trivandrum, Kerala).
தங்களால் முடிந்தவரை தங்களது நண்பர்களுக்கு உறவினர்களுக்கு இந்த தகவலை இந்தப் புகைப்படத்துடன் அனுப்புங்கள்.

தன் எதிர்காலம் பற்றிய பயமே இல்லாமல் இந்தக் குழந்தை சிரித்துக்கொண்டிருப்பது தங்கள் எல்லார் மீதும் வைத்த நம்பிக்கையினால்தான்.
"அங்கிள் அங்கிள் நீங்க எங்க அம்மா அப்பாவை கண்டுபிடிச்சு தந்துறுவீங்க தானே ?"
என்று உங்கள் காதுகளுக்குள் அந்த மழலையின் வேண்டுகோள் வந்து விழுகின்றதா..?
தயவுசெய்து அலட்சியப்படுத்தாதீர்கள் நண்பர்களே. நாம் காசு பணம் செலவழிக்கப்போவதில்லை. ஏதோ நம்மால் ஆன உதவி தகவலை பரப்பினால் போதும். நமக்கென்ன வேறு யாராவது இந்த தகவலை பரப்பிக்கொள்வார்கள் என்று உங்கள் மனதில் சிறு அலட்சியம் கூட வரவேண்டாம்.
இந்தக்குழந்தை
தெருவைத்தாண்டி வந்தால் கூட
திருப்பி அனுப்பிடலாம்!
ஆனால்
கருவைத்தாண்டி வந்துவிட்டதால்
கதறிக் கொண்டிருக்கின்றது..
வாசித்து முடிந்தவுடன் இந்த ப்ளாக்கின் முகவரியை அல்லது http://www.helppoojafindherparents.org
என்ற இணையதளத்தை நண்பர்களுக்கு அனுப்புங்கள். கண்டிப்பாக நீங்கள் செய்யும் இந்த சிறு உதவி உங்கள் வாழ்க்கையை நிச்சயமாய் மேம்படுத்தும்.ஏனென்றால் கடவுள் கவனித்துக்கொண்டே இருக்கின்றார்.
வேண்டுகோளுடன்
ரசிகவ் ஞானியார்
0 Comments:
Post a Comment
<< Home