Saturday, December 23, 2006

தன்னம்பிக்கையின் மனித வடிவம்

3 மாதத்திற்கு முன் புதுமைப்பித்தனின் நூற்றாண்டு விழா ஒன்றிற்கு செல்ல நேரிட்டது. அதில் நான் சந்தித்த ஒரு கண்தெரியாத நண்பரைப்பற்றிய ஒரு நினைவு.

ரு கண்தெரியாத மாணவர் ஒருவரை இன்னொரு மாணவர் அழைத்து வந்து ஒரு இருக்கையில் அமர வைத்தார். எனக்கு குறிப்பு எழுதுவதற்கு பேப்பர் தேவைப்பட்டதால் அந்த கண்தெரியாத மாணவர் வைத்திருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து கிழித்துக்கொள்ளலாம் என்று நினைத்து அவர் அருகே சென்று அமர்ந்தேன்.

அவரிடம் மெல்ல கேட்டேன். "உங்க நோட்டிலிருந்து சில பேப்பர்ஸ் தரமுடியுமா? நான் கொஞ்சம் குறிப்பெடுக்க வேண்டும்"

அவரும் "இதோ கிழித்துக்கொள்ளுங்கள் ஆனால் பிசிறில்லாமல் இருக்கட்டும் " என்று நோட்டுப்புத்தகத்தை தந்தார். பிசிறில்லாமல்..எவ்வளவு சுத்தமான தமிழ்..

நோட்டுப்புத்தகத்தை திறந்தபொழுது எழுதப்பட்டுள்ள கவிதைகள் என்னைக் கவர்ந்தது.

நீங்க கவிதை எழுதுவீங்களா.?

"ஆமா கொஞ்சம் கொஞ்சம் எழுதுவேன்..மனசுல தோன்றியதை யாரிடம் சொல்லமுடியும்..ஆகவே என் மனதின் வடிகால் கவிதை" என்று கூறினார்

வரைப்பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னமும் அதிகமாயிற்று. "படிக்கலாமா" என்று அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன். கவிதைகள் புரிவதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது.

அதில் ஒரு கவிதை இதோ:

காலம் தன்னை
நீட்டியும் குறுக்கியும்
பாதை எங்கிலும் விரிய

இவ்வளவு பொய்க்காசுகள்
எப்படியோ இவர்களால்
அள்ளி வரமுடிகிறது

கலை ததும்பும்
சித்திரக்கோட்டைகளை
அப்பட்டமாக பேரம்பேசும்
சில்லறைப்பேச்சுகளை
பதியம் போட்ட
எனது ப்ரியமான ஏடுகளை
எந்த நிபந்தனையும் அற்ற
தீயிடம் சமர்ப்பிக்கின்றேன்

இப்படிக்கு
சாம்பல் தூதன்


அவரிடம் மெல்லக் கேட்டேன்.

இந்தக் கவிதைக்கு அர்த்தம் என்ன என்று?

"விதை எனக்கும் உலகத்திற்கும் உள்ள விசயம். உலகம் என்னை எப்படி புரிந்து கொள்கிறது என்பதை கவிதையின் மூலமாக வெளிப்படுத்துகின்றேன் " என்றார்.

சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கிறாரா இல்லை எனக்குத்தான் அவர் சொல்வது புரியவில்லையா? என்று தெரியாமல் பக்கத்தில் உள்ள நண்பர் ஷாபியிடம் கேட்டேன்.

" என்ன ஷாபி ? இந்தக் கவிதையின் அர்த்தம் என்ன..? "

"எல்லாருமே பொய்யர்களாகவே இருக்கின்றார்கள். யாருமே என்னை புரிந்து கொள்ளவில்லை " என்பதைத்தான் இந்தக்கவிதையில் சொல்லியிருக்கின்றார் என்று சுருக்கமாக கூறி முடித்துவிட்டார்.

நீங்க எங்க படிக்கிறீங்க..?

ரமேஷிடம் மெல்லக் கேட்டேன்..
"எம்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றேன் என்றார்"

ஏதாவது புத்தகம் போட்டிருக்கீங்களா..?

"ம் இரவின் உயரம் என்ற ஒரே ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கின்றேன்.."


அப்பொழுது விழா ஆரம்பிப்பதற்குண்டான சலசலப்புகள் அதிகமாகியதால் அவரிடம் பேச்சைக் குறைத்துக்கொண்டு விழாவில் கவனம் செலுத்தினேன்.

விழா முடியும் தருவாயில் அந்த கண்தெரியாத மாணவர் ரமேஷ் என்னிடம் தன்னை வாசற்படி வரை கொண்டு வந்து விடுமாறு கேட்டுக்கொள்ள நான் அவரை கைப்பிடித்து அழைத்துச் சென்றேன். போகும் வழியில் அவரிடம் ஒரு சின்ன பேட்டி.

உங்க வீட்டுல எத்தனை பேர்?

"3 பேருங்க 1 அண்ணன் 1 தம்பி"

அவங்க என்ன பண்றாங்க?

"அண்ணன் டாக்டர் -- தம்பி ஊர்ல படிக்கின்றான்"

பெற்றோர்?

"அப்பா கோழி வியாபாரம்
அம்மா பால் வியாபாரம்
நான் புத்தக வியாபாரம்"

ஏன்? அப்பா அம்மா பணம் அனுப்ப மாட்டாங்களா?

"அவங்க கை அந்த அளவுக்கு நீளமில்லை "( அழகாய் பதில் அளித்தார்)

நீங்க ஊர்லையே இருக்க வேண்டியதுதானே?

"பெற்றோர்கள் உதவுவதே இல்லை. அவர்களுக்கு சரியான திட்டமிடுதல் கிடையாது. அவர்கள் தேடலில் மூழ்கி விட்டார்கள் . பொறுப்பில்லை "

என்று பதில் சொல்லிக்கொண்டே வந்தவர் தேவநேயப்பாவாணர் நூலகத்தின் வெளியே வந்ததும் "நீங்க போங்க சார் நான் இனிமேல் போயிருவேன் " என்றர்.

"இல்லை ரோட்டை க்ராஸ் பண்ணித்தானே போகனும். நான் அந்த பஸ் ஸ்டாப் வரைக்கும் வந்து விடுறேன்" என்று கூறி பேட்டியை தொடர்ந்தேன்.

"அப்பப்ப பணம் அனுப்புவாங்க..யு. ஜி வரைக்கும் படிக்க வச்சாங்க..அதுக்குப்புறம் நான்தான் பார்த்துக்குறேன்.."

"வீட்டுக்குப் போனா சாப்பாடு கிடைக்கும். ஆனா மரியாதை...?"

என்று அவர் சொல்லிக்கொண்டிருப்பதை கண்ணீரோடு கவனித்தேன்.
அப்ப அண்ணன் டாக்டர்னு சொன்னீங்க..?

"ஆமா..கண் தெரியாத எனக்கு செலவழிச்சா நான் காப்பாத்துவேனான்னு அவர்களுக்கு சந்தேகம் . அதனால அண்ணனை மட்டும் படிக்க வச்சாங்க.."

"அவனுக்கு அங்க கடன் அதிகம் .. அவன் பணம் அனுப்ப முடியாது.."

"என்செலவுக்கு நானே உழைக்கின்றேன். நாம பெரியாரோட சுயமரியாதை புத்தகமெல்லாம் படிக்கின்றோம் மத்தவங்கிட்ட கைநீட்ட முடியுமா..? சுயமரியாதை என்னாகுறது..?" என்று தான் வார விடுமுறையில் இரயிலில் புத்தகம் விற்பதாக கூறினார்.

அவரை கைப்பிடித்து அழைத்து வரும்பொழுது வாசற்படிகளிலும் சாலையிலும் இரண்டு முறை தடுமாறி விழப்பார்த்தேன் நான்.

அவரோ "பார்த்து வாங்க சார் இங்கே ஒரு மேடு இருக்கும்" என்று என்னிடம் கூறி என்னை பார்வையில்லாதவனாக்கினார். அவர் என் கைப்பிடித்தாலும் வெகு அலட்சியமாக நடந்து வந்ததை கண்டு ஆச்சர்யப்பட்டேன்.


பேருந்து நிலையம் வந்ததும் கூட்ட நெரிசல் உள்ள ஒரு பேருந்தில் அவரை ஏற்றிவிட அவர் நான் நின்றிருந்த திசையை நோக்கி டாட்டா காட்டிவிட்டு சென்றுகொண்டிருந்தார்.

எனக்கு நம்பிக்கை என்ற வார்த்தைகள் முழு உருவமாகி விழாவுக்கு வந்து விட்டு
சென்றதைப் போல ஒரு உணர்வு.


இதுதான் அவருயை தொலைபேசி எண்
"மு. ரமேஷ் - 9942191838 . "

யாரேனும் எந்த வகையிலாவது அவருக்கு உதவ முடிந்தால் உதவுங்களேன்.

அவருடைய கவிதைக்கு வாழ்த்தோ அல்லது தனியாக இரயிலில் புத்தகம் விற்று சம்பாதிக்கும் அவருடைய தன்னம்பிக்கையை பாராட்டியோ பேசுங்களேன். அவர் கொஞ்சம் உற்சாகமடையக்கூடும்.

- ரசிகவ் ஞானியார்


ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

செந்தழல் ரவி அவர்களின் பதிவை இங்கே பதிப்பிக்கிறேன்...

சமீபத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு நன்பரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கடந்த வாரம் - கல்விக்காக பணம் கட்டமுடியாததால் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மாணவியை பற்றி கூறினார்...இதயம் கனத்துப்போனது...இதனை நம் வலைப்பூவினரிடம் கூறி தேவையான நிதியை திரட்டி அந்த மாணவியின் கல்விக்கண் திறந்தாலென்ன என்ற எண்ணம் உதயமானது...!! அதை செயல்படுத்துமுகத்தான் இந்த பதிவு...

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி கிராமத்தை சேர்ந்த இந்த மாணவியின் பெயர் ஆர்.மகாலட்சுமி..தந்தையார் பெயர் ராமன்..படித்தது எம்.எஸ்.ஸி / காந்திகிராமம் கல்லூரியில்...எம்.எஸ்.ஸி அப்ளைடு பயாலஜி பிரிவில் பட்டம் பெற்றுள்ள இவரது மதிப்பெண் ( 1978 / 2750 ). இப்போது பி.எட்: ஆர்.வி.எஸ் எஞ்சினீயரிங் கல்லூரியில் படிக்கும் போது தான் இந்த நிகழ்வு அந்த பெண்ணுக்கு...தந்தையார் கடைகளில் எண்ணையை வாங்கி வீடுவீடாக விற்கும் பணியை செய்து சொற்ப வருமானம் பெறுகிறார்...

ஒரு தம்பியும் தங்கையும் உள்ளனர்..தம்பி படிக்காததால் ஒரு மெக்கானிக் ஒர்க் ஷாப்பில் வேலைசெய்கிறார்...தங்கை ஐ.டி.ஐ படிக்கிறாராம்... இவள் முன்னுக்கு வந்தால்தான் குடும்பம் வாழமுடியும் என்னும் நிலை....மிகுந்த ஏழ்மை நிலையில் இருக்கும் இவரது கல்விக்கண் திறந்தால் வாழுமே ஒரு குடும்பம்...

இந்த சமயத்தில் நம் உள்ளத்தில் எழும் சாதாரண கேள்விகள் என்ன ? இந்த பெண் உண்மையிலேயே உதவியை பெற தகுதி உள்ளவரா ? நாம் கொடுக்கும் நிதியை இவர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்த மாட்டார் என்பது என்ன நிச்சயம் ? இந்த விவரங்களை சரிபார்த்தது யார் ? மாணவியின் மதிப்பெண் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டனவா ? இந்த மாணவிக்காக நாம் அளிக்கும் நிதி சரியாக கல்லூரி கட்டணத்தை செலுத்த பயன்படுத்தப்படுமா ? என்பன போன்றவையே...

வலையுலகின் மூத்த பதிவரும் நம் அனைவரின் மதிப்புக்கும் அன்புக்கும் உரியவருமாகிய பதிவர் ஞானவெட்டியானை அவரது இல்லத்தில் நேற்று மாலை மாணவி மகாலட்சுமி சந்தித்தார்...அய்யா அவர்கள், மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்த்ததோடல்லாமல் முழு இதயத்தோடு இந்த மாணவிக்கு நாம் உதவி செய்யவேண்டும் என்று கூறி இருக்கிறார்.....

இப்போது நமது திட்டம் என்ன ? ஞானவெட்டியான் அய்யா அவர்கள் முகவரிக்கு வங்கி வரைவோலையை / காசோலையை அனுப்பிவிட்டால் அவர் அதை தொகுத்து கல்லூரியிலேயே கட்டிவிடுவதாக கூறி இருக்கிறார்...அவரது விவரங்கள் (N.JAYACHANDRAN - a/c @ SBI - NEHRUJI NAGAR.)

அவரது மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண்
njaanam@gmail.com
0451-2436844


வங்கி கணக்கு

N.JAYACHANDRAN
SBI Account No: 10261284116
NEHRUJI NAGAR
DINDUKKAL


அனுப்பியபிறகு தனக்கு ஒரு மடல் அனுப்புமாறு ஞானவெட்டியான் கேட்டுள்ளார்..அவரது மின்னஞ்சல் மீண்டும் njaanam@gmail.com

ஐசிஐசியை வங்கி கணக்கு தேவையுள்ளது என்று தெரிந்துள்ளதால் என் ஐசிஐசிஐ வங்கி கணக்கையும் தருகிறேன்...

ICICI A/C : 625301514495
Branch : Kumar Park Branch
Name : Ravindran A