இறைவன் உங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றான்.
செல்வங்களையும் வசதிகளையும் ஒரே இடத்தில் இறைவன் குவித்து வைக்காமல் சிலருக்கு செல்வத்தையும் சிலருக்கு வறுமையையும் தந்திருக்கின்றான். செல்வம் தந்தவருக்கு வறுமையில் இருப்பவர்களுக்கு உதவி ஒரு சமநிலையை உருவாக்கி வைப்பதற்காகவே இந்த ஏற்பாடு.
இந்த மாணவர்களின் எதிர்காலம் இருண்டு விடாமல் இருக்க மனிதநேயமுள்ளவர்களே கொஞ்சம் உதவுங்களேன். இறைவன் தங்களது படிப்பு வசதிக்காக தங்களது பெற்றோர்களுக்கு எந்த குறையுமே வைக்காமல் வசதியைக் கொடுத்திருக்கின்றான். ஆனால் இவர்களுக்கு அப்படியல்ல..
உங்களைப்போன்றோர்களின் உதவியால்தான் இவர்களின் எதிர்காலம் வெளிச்சமடையட்டும் என்று விட்டு வைத்திருக்கின்றான்.
ஆகவே மகிழ்ச்சியடையுங்கள். கடவுளின் கண்பார்வை தங்களின் மீது விழுந்திருக்கின்றது. இறைவன் மற்றவர்களுக்கு உதவுவதற்காக உங்களை தேர்ந்தெடுத்து இருக்கின்றான்.
உங்களுக்குப் புண்ணிமாகப்போகும் கொஞ்சூண்டு உதவுங்களேன். இந்த மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்.
படிக்க ஆர்வம் - வாட்டும் வறுமை - உதவிக்கு ஏக்கம்
நன்றி : தட்ஸ்தமிழ்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜெனரல் கரியப்பா மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 12 பேர் பிளஸ் டூவை முடித்துவிட்டு தங்களது மேல் படிப்புக்காக பிறரது உதவியை நாடி காத்துள்ளனர்.
கில்டு ஆப் சர்வீஸ்; என்ற சேவை நிறுவனத்தில் கரியப்பா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 1956ம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் இப்பள்ளியை தொடங்கி வைத்தார்.
அன்று முதல் இன்று வரை சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினரின் பாதுகாவலனாக கரியப்பா பள்ளி விளங்குகிறது. இங்கு படிக்கும் மாணவ, மாணவியர் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதில் அவர்களிடம் மிக மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. அதையும் கட்ட இயலாதவர்களிடம் கட்டணமே வசூலிக்கப்படுவதில்லையாம்.
தமிழகத்திலேயே இந்த ஒரு பள்ளியில் மட்டும்தான் பிளஸ்1, பிளஸ் டூவில் வொகேஷனல் பிரிவு எனப்படும் தொழிற் படிப்பு மட்டுமே சொல்லித் தரப்படுகிறது.
கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியையும் கண்டு சாதனை படைத்துள்ளது கரியப்பா பள்ளி.
ஜெனரல் கரியப்பா என்ற கம்பீரமான பெயரைத் தாங்கி நிற்கும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் நிலை சொல்லிக் கொள்ளும்படி சந்தோஷமாக இல்லை. இங்கு படிக்கும் அத்தனை பேரின் குடும்பங்களும் மிகவும் மோசமான பொருளாரப் பின்னணியைக் கொண்டவை.
கூலி வேலை செய்யும் தந்தை, வீட்டு வேலை செய்யும் தாயார், பள்ளி நேரம் போக மற்ற நேரங்களில் ஏதாவது வேலை பார்த்துக் கொண்டு படிப்புச் செலவுக்கு பணம் சம்பாதிப்பது என இந்த மாணவ, மாணவியரின் நிலை மிகவும் சோகமானது.
ஆனாலும் கூட இந்தப் பள்ளியில் படித்த 12 பேர் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பிடித்து சாதனை படைத்து மேற்படிப்பு படிக்க பெருத்த ஆவலோடு உ ள்ளனர்.
மாநிலத்திலேயே முதலிடம் பெற்ற மாணவி:
ஜெ.சாந்தலட்சுமி. இவர் டிராப்டஸ்மேன் சிவில் பாடப் பிரிவில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ளார். இப்பாடத்தில் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மொத்த மதிப்பெண்கள் 1,200க்கு 1,090.
இவரது தந்தை ஜெயக்குமார் காய்கறிகள் விற்கும் தொழில் செய்கிறார். அவரது சொற்ப ஊதியத்தை வைத்துத்தான் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள். பி.இ. கம்ப்யூட்டர் அறிவியல் படிக்க விரும்பும் சாந்தலட்சுமி எதிர்பார்ப்பது மேல் படிப்புக்கு தேவையான பொருளாதார உதவியை.
2வது இடம்:
டி.சரவணக்குமார். இவர் டிராப்ட்ஸ்மேன் சிவில் பிரிவில் மாநலத்திலேயே 2வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் வாங்கியுள்ள மொத்த மதிப்பெண்கள் 1,200க்கு 1,068.
இவரது தந்தை தெய்வசிகாமணி லாரி டிரைவர். மாதத்தில் 10 நாட்கள்தான் லாரி ஓட்ட வாய்ப்பு கிடைக்கும். மற்ற 20 நாட்களும் வேறு வேலைதான் பார்க்க வேண்டும். இதில் குடிப்பழக்கம் வேறு.
கையில் பணம் இருந்தால் வீட்டுக்குக் கொடுப்பாராம். தாயார் வீட்டு வேலை செய்து வருகிறார். மிகவும் கஷ்டப்பட்டுப் படித்து பிளஸ் டூவை சாதனையுடன் முடித்துள்ளார் சரவணக்குமார் பி.இ. படிக்க ஆசையாக உள்ளார். இவருக்கும் தேவை பண உதவி.
1,074 எடுத்த கார் டிரைவர் மகன்:
டி.பரதன். கார் டிரைவரின் மகனான பரதன், ஆட்டோமொபைல் மெக்கானிக் பாடப் பிரிவில் மாநிலத்திலேயே 2வது இடத்தைப் பிடித்துள்ளார். மொத்தமாக 1,200க்கு 1,074 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
தந்தை கொண்டு வரும் சொற்ப சம்பளத்தை வைத்து மூச்சைப் பிடித்து குடும்ப வண்டி ஓடுகிறது.
தனது படிப்புக்கு தந்தையை எதிர்பார்த்து சிரமப்படுத்த வேண்டாமே என்பதற்காக ஒரு எலக்ட்ரீஷியனிடம் தினக் கூலிக்கு வேலை பார்த்துக் கொண்டே படித்தவர் பரதன். இப்படிப்பட்ட இக்கட்டான பொருளாதார நெருக்கடியிலும், பி.இ. படித்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார் பரதன்.
ஆனால் குடும்பப் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருப்பதால் தன்னால் பி.இ. படிக்க முடியுமா என்ற ஏக்கம் பரதனிடம் காணப்படுகிறது.
ஆட்டோமொபைல் படிப்பில் முதலிடம்:
டி.மணிகண்டன். இவர் ஆட்டோமொபைல் மெக்கானிக் பிரிவில் மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார். மொத்த மதிப்பெண்கள் 1,200க்கு 988. இவரது தந்தை கூலி வேலை செய்பவர்.
ஆட்டோமொபைல் என்ஜினியரிங் படிக்க ஆசையாக உள்ளார் மணிகண்டன். நல்ல மனம் படைத்தோரின் உதவிக் கரங்கங்க்காக கண்களில் கவலையுடன் காத்துள்ளார்.
நுழைவு தேர்வு: பீஸ் கட்ட பணமில்லை
எம்.ரேவதி. இவரின் கதை மிகவும் சோகமானது. 1,200க்கு 1,073 மதிப்பெண்கள் எடுத்துள்ள ரேவதி, நுழைவுத் தேர்வு எழுதவில்லை.
காரணம், தேர்வுக்குப் ஃபீஸ் கட்ட கையில் பணம் இல்லை. மேலும், மேல் படிப்பு படிக்க வைக்க வசதி இல்லாததால், படிக்க வேண்டாம் என்று கூறி விட்டார்கள். ஆனால் இப்போது ரேவதி நல்ல மார்க்குகள் வாங்கியிருப்பதைப் பார்த்து படிக்க முடிந்தால் படி என்று கூறுகிறார்களாம்.
பி.எம்.சி.பி. எனப்படும் பிசினஸ் மெக்கானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் புரோகிராமிங் பிரிவில் மாநிலத்திலேயே 2வது இடத்தைப் பிடித்துள்ளார் ரேவதி. நுழைவுத் தேர்வு எழுதாததால், அரசு கோட்டாவில் இவரால் நல்ல பொறியியல் கல்லூரியில் சேர முடியாது.
தனியார் சுயநிதி கல்லூரிகளில்தான் சேர முடியும். ஆனால் அதற்கு பல லட்சம் தேவைப்படும் என்பதால், பி.சி.ஏ. படிக்கலாம் என்ற யோசனையில் உள்ளார். ஆனால் அதையும் கூட ரேவதியால் பொருளாதார ரீதியாக சந்திக்க முடியாத நிலை.
கூலித் தொழிலாளி மகள்:
ஏ.சுமதி. இவர் பி.எம்.சி.பி. பிரிவில் மாநிலத்திலேயே 3வது இடத்தைப் பெற்றுள்ளார். இவரது மொத்த மதிப்பெண்கள் 1,005. தந்தை கூலி வேலை செய்பவர். இவருக்கும் பொறியாளர் ஆக வேண்டும் என்ற கனவு உள்ளது. ஆனாலும் நுழைவுத் தேர்வு எழுதவில்லை. எனவே பி.சி.ஏ. படிக்கலாம் என்ற முடிவில் உள்ளார். இவருக்கும் படிப்புக்கு உதவி தேவை.
ஏசி மெக்கானிசம் முதலிடம்:
எஸ்.பாபு. ஏ.சி. மெக்கானிசம் பிரிவில் மாநிலத்திலேயே முதலிடம். மொத்த மதிப்பெண்கள் 1,200க்கு 1,010. தந்தை கூலி வேலை செய்கிறார். தாயார் வீட்டு வேலை செய்கிறார். தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக்கில் சேர்ந்து டிப்ளமோ படிக்க ஆர்வமாக உள்ளார் பாபு.
இந்தப் படிப்பு மொத்தம் 2 ஆண்டுகள். ஒரு ஆண்டுக்குரிய செலவு (படிப்புக்கட்டணம், புத்தகம் உட்பட) ரூ. 6,000 ஆகுமாம். மொத்தமாக படிப்பை முடிக்க ரூ. 12,000 தேவைப்படும் என்று கூறும் பாபு, இந்தப் பணத்தைப் புரட்ட முடியாத நிலையில் உள்ளார்.
உதவி கிடைத்தால் என்னால் டிப்ளமோ படிக்க முடியும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
மாநிலத்தில் 2ம் இடம்:
எம்.திரன்குமார். இவரும் ஏ.சி. மெக்கானிசம் பிரிவைச் சேர்ந்தவர்தான். இதில் மாநிலத்தில் 2வது இடத்தைப் பிடித்திருக்கிறார். மொத்த மதிப்பெண்கள் 933. திரன்குமாருக்கு பி.எஸ்.சி. படிக்க ஆசை.
ஆனால் அதற்கு வசதியில்லை. தந்தை கூலி வேலை செய்பவர். தாயார் வீட்டு வேலை செய்து வருமானம் பார்க்கிறார். நல்ல மனம் படைத்தவர்களின் உதவி கிடைத்தால் படிக்க முடியும் என்கிறார் திரன்குமார்.
3ம் இடம்:
ஜி.சந்திரசேகர். 1,007 மதிப்பெண்கள் பெற்றுள்ள சந்திரசேகர், ஏ.சி. மெக்கானிசம் பிரிவில் மாநிலத்திலேயே 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவரது தந்தையும் கூலி வேலை செய்பவர்தான்.
தரமணி பாலிடெக்னிக்கில் படிக்க பெரும் ஆர்வமாக உள்ளார் சந்திரசேகர். உதவி கிடைத்தால் படித்து சாதனைகள் படைப்பேன் என்கிறார் ஆவலாக.
லைட்மேன் மகன்:
டி.பாலாஜி. ரேடியோடிவி மெக்கானிசம் பாடத்தில் மாநலத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார் பாலாஜி. மொத்த மதிப்பெண்கள் 996. இவரது தந்தை சினிமாவில் லைட்மேனாக வேலை பார்க்கிறார். தினசரி வேலை இருக்காதாம்.
மிகுந்த பொருளாதார சிரமங்கங்க்கிடையே பிளஸ் டூ வரை முடித்து விட்டார் பாலாஜி. அடுத்து பொறியியல் படிக்க விரும்புகிறார், நுழைவுத் தேர்வும் எழுதியுள்ளார். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஆனால் தொடர்ந்து படிக்க அவருக்கு தேவை தாராள மனம் படைத்தோரின் உதவி தேவை.
பிஸ்கெட் வியாபாரி மகன்:
ஏ.குமரன். ரேடியோ டிவி பாடத்தில் 2வது ரேங்க் பெற்றுள்ளார். 947 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை பிஸ்கட் போன்றவற்றை வீட்டிலேயே செய்து கடை கடையாக கொண்டு சென்று விற்று வருகிறார். தாயார் அவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.
பி.இ. படிக்க ஆர்வமாக உள்ளார் குமரன். இவருக்கும் பிறரின் உதவி அவசியமாக உள்ளது.
அமுதா - நர்சிங் கனவுடன்:
ஜி. அமுதா. நர்சிங்கில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்துள்ள அமுதாவும் மேல் படிப்புக்காக மற்றவர் தயவை எதிர்நோக்கி காத்துள்ளார்.
இவர்களை தவிர மேலும் பல மாணவ, மாணவியர் மேல் படிப்பு படிக்கும் வேட்கையில், ஆனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி என்ன செய்வது என்றஆதங்கத்தில் கையைப் பிசைந்து கொண்டு உள்ளனர்.
இளம் விஞ்ஞானி:
அவர்களில் சதீஷ்குமார் கொஞ்சம் வித்தியாசமானவர்.
இவருக்கு பள்ளியில் இளம் விஞ்ஞானி என்று பெயராம். காரணம், பள்ளி ஆய்வகங்களில் சோதனைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளை இவர் தனது சொந்த முயற்சியால் செய்து சாதனை படைத்துள்ளார்
இதற்காக பச்சையப்பன் கல்லூரி இயற்பியல் துறை தலைவரிடம் பாராட்டும் பெற்றுள்ளார்.
976 மதிப்பெண்கள் பெற்றுள்ள சதீஷ்குமார், பி.இ படிக்க ஆர்வமாக உள்ளார். இவருக்கு தாயார் மட்டுமே. தந்தை இல்லை. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சதீஷைப் பார்க்கும்போது, ஆரம்ப காலத்தில் அப்துல் கலாமும் இப்படித்தான் இருந்திருப்பார் என எண்ணத் தோன்றியது.
இவருக்கு உதவிகள் மட்டும் தொடர்ந்து கிடைத்தால் நிச்சயமாக கலாம் போன்ற சாதனையாளராக சதீஷ்குமார் உருவாவார் என்கிறார் பள்ளி நிர்வாகிகள்.
இதேபோல ஜெனரல் மிஷினிஸ்ட் பாடத்தில் ரேங்க் பெற்றுள்ள எஸ்.சிவராம், 1,058 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மெக்கானிக்கல் என்ஜினியர் ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளார் சிவராம்.
ஆனால் மேல்படிப்பு படிக்க அவருக்கு தேவை நல்ல மனம் படைத்தவர்களின் தாராள உதவி. இதே நிலையில்தான் இருக்கிறார் வெங்கடேஷ். இவர் 1,042 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பொறியியல் படிக்க ஆர்வமாக உள்ளார்.
உதவித் தலைமை ஆசிரியை பேட்டி:
பள்ளி உதவி தலைமை ஆசிரியை எத்தேல் மெர்சி பாய் கூறுகையில், எங்களது பள்ளியில் வசதி இல்லாதவர்கள், கூலி வேலை செய்பவர்களின் குழந்தைகள், முன்னாள் கைதிகளின் குழந்தைகள் என சமூகத்தின் அடித்தட்டில் இருப்பவர்கள்தான் படிக்கிறார்கள்.
பல்வேறு தரப்பினரின் உதவியுடன்தான் இவர்கள் படித்து வருகிறார்கள்.
பிளஸ் டூ வரை தட்டி முட்டி படித்து விடுகிறார்கள். ஆனால் மேல் படிப்புக்கு இவர்களுக்கு வழி இல்லை. படிக்க ஆர்வம் இருந்தாலும் கையில் பணம் இல்லாமல் படிக்க முடியாது என்பதால் பலர் சாதாரண வேலைக்க்குப் போய் விடுகிறார்கள்.
இருப்பினும் தாராள மனம் படைத்தவர்கள் பலர் எங்களது பிள்iளைகளுக்கு உதவி செய்து வருகிறார்கள். இதனால் பலர் மேல் படிப்பை முடித்து நல்ல வேலையிலும் அமர முடிந்திருக்கிறது.
இந்த ஆண்டு நல்ல மதிப்பெண்களுடன் தேர்வை முடித்துள்ள இந்த மாணவ, மாணவியருக்கு போதுமான நிதியுதவி கிடைத்தால் நிச்சயம் இவர்கள் சாதனை படைப்பார்கள் என்றார் உருக்கமாக.
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆயிரம் எழுப்புவதை விட ஒரு ஏழைக்கு எழுத்தறிவித்தல் கோடி புண்ணியத்தைத் தரும் என்றார் பாரதி.
நாங்கள் இங்கே கொடுத்திருக்கும் ஏழை மாணவர்களின் கனவுகள் மிகப் பெரியவை. அவை கண்ணீரில் கரைந்துவிடாமல் தடுக்க முடிந்தால் உங்கள் உதவிக் கரத்தை நீட்டுங்களேன்...
உதவ நினைப்போர் அணுக வேண்டிய முகவரி:
முருகையன்,
தலைமை ஆசிரியர்,
ஜெனரல் கரியப்பா மேல் நிலைப்பள்ளி,
கில்டு ஆப் சரவீஸ் (சென்ட்ரல்),
சாலிகிராமம், சென்னை 600 093.
தொலைபேசி எண்: 04423621793
அன்புடன்
ரசிகவ் ஞானியார்